Tuesday, September 23, 2008

இராஜகேசரி இராஜராஜ சோழன்

இராஜகேசரி இராஜராஜ சோழன்

இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.

ஆதித்தன்- திருவேலங்காட்டுச் செப்பேடு
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

பேரரசன் அருண்மொழி
இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.
"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்"

1) காந்தளூர்ச் சாலை:
இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும் பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.
இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமர புயங்கன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராஜராஜன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 - 1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

2)மலைநாடு
கி.பி 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.




3)ஈழப் போர்
இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.

பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.

ஈழத்தில் சோழக் கோயில்கள்
இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.


மேலைச் சாளுக்கியர்-சத்யாசிரயனுடன் போர்

இரண்டாம் தைலப்பன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய கி.பி 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன.

ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராஜராஜனது கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது

இராஜேந்திரன் தலைமை
தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.

பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளை சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்
இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் இது கட்டி முடிக்கப்பட்டது.

பட்டங்கள்
இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.

No comments: