Tuesday, October 21, 2008

களப்பாளர்கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிம்மவிட்டுணு பல்லவன் களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதி, பல்லவர்களுக்கு அடங்கிய முத்தரையர்களினால் ஆளப்பட்டு வந்தது. களப்பிரர்கள் பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடுத்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும். இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த யாப்பெருங்காலக்காரிகையின் ஆசிரியரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடங்களை மேற்கோள்காட்டியுள்ளார். இம்மன்னர் பௌத்த மதத்தைச்சேர்ந்தவனாய் இருக்கக்கூடும். அச்சுத களப்பாளன்கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தின் மத்திய பகுதியில் களப்பிரர் ஆட்சி செய்தனர். அவர்களுள் ஒருவனே அச்சுத களப்பாளன். இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.வீழ்ச்சிஅச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும் பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணத்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர

Sunday, October 19, 2008

விக்கிரம சோழன்
விக்கிரம சோழன், முதலாம் குலோதுங்கனுக்கு பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே சோழ இராச்சியத்தின் அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூடப்பட்டான். பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. விக்கிரமசோழ உலா எனும் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூலில் இவனைப் பற்றி அறியலாம்.

வேங்கிப் போர்
சாளுக்கிய மன்னனாகிய விக்கிரமாதித்தனின் மறைவுக்கு பின் சாளுக்கிய அரசர்கள் வளு இழந்தனர். அது மட்டும் இல்லாமல் தங்களின் மரபு வழி பூமியாகிய வேங்கியை இழக்க விக்ரம சோழனும் விரும்பவில்லை ஆதலால் தனது மகன் அபயகுலோத்துங்கனின் தலைமைகள் ஒரு படையினை வெங்கிக்கு அனுப்பி வைத்தான். சோழர்களுக்குத் துணையாக சோட நாட்டுத் தலைவர்களாகிய கொனகண்டேஸ்வரனும் கிரிபச்சிமாவும் துணை இருந்தனர்.
இந்த போரின் மூலம் சோழ தேசம் எந்த எல்லையையும் விக்கிரம சோழனின் காலத்தில் இழக்காமல் இருந்தது.

கலிங்கப் போர்
குலோத்துங்கனின் காலத்திற்கு பின்பு இவன் காலத்திலும் கலிங்கப் போர் நடைப் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. முதலாம் குலோத்துங்கனின் காலத்திலும் விக்கிரம சோழனே படைகளுடன் சென்றுள்ளான். கருணாகரப் பல்லவன் விக்ரம சோழனின் காலத்திலும் துணை இருந்துள்ளதாக இந்த போரின் குறிப்புகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் இந்தப் போரினை அடுத்து நிகழ்ந்த கங்காவடி போரினிலும் கலந்துக் கொண்டுள்ளான். ஆதலால் கருணாகரன் குலோத்துங்கன் காலத்திலும் விக்கிரமன் காலத்திலும் சோழர்களுக்கு துணை இருந்துள்ளான் என்பதனை அறிந்துக் கொள்ளலாம். விக்கிரம சோழன் கலிங்கத்தின் மீது படை எடுத்தமையை ஓட்டக்குத்தர் உலா மூலம் அறிந்துக் கொள்ளலாம். இந்த கலிங்கத்து போரிலும் சோழர்கள் வெற்றிப் பெற்றமையால் சோழ நாடு சுருங்காமல் இருந்தது.

கங்காவடிப் போர்

இந்தக் காலக் கட்டமே ஹோய்சாளர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற காலம் ஆகும். சாளுக்கியர்களின் காலம் முடிந்து, ஹோய்சாலர்களின் ஆட்சிக் காலம் ஆரம்பம் ஆகிய காலத்தே நிகழ்ந்த இந்தப் போரின் கங்காவாடிப் பகுதியை சோழர்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர். ஆதலால் விக்கிரம சோழன் ஹோய்சாளர்கள் மீது போர் தொடுத்து கங்காவாடிப் பகுதியை மீட்டான்.

தேச அளவு

தன் தந்தையின் காலத்தில் பலப் போர்களில் பங்கெடுத்த விக்கிரமன், தனது ஆட்சிக் காலத்தில் மிக குறைந்தப் போர்களிலேயே ஈடுப் பட்டான். சேர நாடும் பாண்டிய நாடும் இவனுக்கு பணிந்தே இருந்தனர். இலங்கை தேசம் புலனருவா பகுதி வரை சோழ அரசு விரிந்து இருந்தது.

திருசிற்றம்பலம்

விக்கிரம சோழன் தீவிர சிவ பக்தனாக விளங்கினான். சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்கு பொற்கூரை வேயந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகே தனக்கு ஒரு மாளிகையும் கட்டிக் கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளை கழித்தான்.

தியாகசமுத்ரம்

விக்கிரம சோழலனின் ஆட்சிக் காலத்தில் மழை இல்லமால் சிறிது வறுமை தலை தூக்கியது. ஆதலால் விக்கிரமன் தனது மக்களுக்கு பற்பல தானங்கள் வழங்கி வருமைகளை களைந்தான். ஆதலால் அவனுக்கு இந்தப் பெயர் கிடைத்தது.

Monday, October 6, 2008

குலோத்துங்க சோழன் I

கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில்,இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச்சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர். இவன் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டான்.
இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தில் சோழப்பேரரசு சிறிது சுருங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை,விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.
நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

குலோத்துங்கனின் சோழ மரபு உரிமை

ராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அநபாய சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத்துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த aஆறாம் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது.

ஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன். ஆறாம் விக்கிரமாதிதனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபை புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. kuzhap

குழப்பங்கள்:

சோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது. இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கழகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப் பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.

சாளுக்கியப் போர்

அரசுரிமையை ஏற்றவுடன் குலோத்துங்கன் கலகங்களை கட்டுப்படுத்துவதில் ஈடுப்பட்டான். அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆகிய ஆறாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான் ஆதலால் குலோத்துங்கன் அரசுரிமை பெற்றதை தாளாமல் தொடர்ந்து கலகங்களை மக்கள் மூலம் ஏற்படுத்தினான். இதன் பொருட்டு சாளுக்கியனுடன் போர் புரிந்தான் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கியனாகிய சோமேச்வரன் குலோத்துங்கனுக்கு உதவும் பொருட்டு (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனை பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழ படைகளோ சாளுக்கியப் படைகளை வேகமாக தக்க ஆரம்பித்தன, தோல்விதனை உணர்ந்த விக்கிரமாதித்தன் படைகளைப் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்தான். தனது வெற்றியை உறுதி செய்த்த குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை நசுக்கித் தள்ளிவிட்டு சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து சோழ நாடு திரும்பினான். சாளுக்கிய போரில் சாளுக்கியனுடன் உறவுக் கொண்ட கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.

படைத் தளபதிகள்:

சாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள்.

1) இளவரசன் ராஜேந்திர சோழன்

குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். இவன் யானைப் படைகளை கை கொள்வதில் சிறந்தவனாக விளங்கியதாக கூறப்படுகின்றது. வாள் பயிற்ச்சியில் மிகப் பெரும் வீரனாக விளங்கியதாக அறியப் படுகின்றது.

2) அரையன் காளிங்கராயர்:

குலோத்துங்கனின் அரசபையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அமைச்சனாகவும் படைகளை கையாள்வதில் அன்புவம் மிகுந்த செனதிபதியாகவும் விளங்கியவர் அரையன் காளிங்கராயர். இவரது படைத் தலைமையில் தான் சாளுக்கிய போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இவரின் மறு பேர் அரையன் பொன்னம்பலக் கூததன்.

3) சேனாதிபதி இருங்கோவேள்

4) அரையன் சயந்தன் ஆகியோர் இப்போரில் கலந்துக் கொண்டதாக காணப் படுகின்றது.

பாண்டிய சேர யுத்தங்கள்:

குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்கள் போர்க் களத்தில் தான் பெரிதும் செலவிடப் பட்டன. தான் ஆட்சி ஏறிய பின்பு தனது ஆட்சியை நிலைப் படுத்தும் பொருட்டு ஏற்ப்பட்ட போர்கள் ஆதலால் அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் வேண்டி இருந்தது. அவனிற்கு துணை நின்று போர் புரியவும் தலை சிறந்த படைத் தலைவர்கள் கிடைத்தார்கள்.

சாளுக்கிய தேசத்தில் போரினை வென்று அவன் சோழ தலைநகரிற்கு திரும்பாமல் நேராக பாண்டிய தேசம் நோக்கி சென்றான். சோழர்களின் படைத் தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான் குலோதுங்கநிற்கு உதவும் பொருட்டு. அவனுடன் சோழர்களின் படைத் தளபதி பல்லவ தொண்டைமான் என்கின்ற கருணாகர தொண்டைமானும் உடையான் ஆதித்த வேடவனாமுடையானும் படை முகாம் மிட்டு இருந்தனர். இவர்கள் பொன்னமராவதி அருகே முகாமிட்டு குலோதுங்கனுக்காக காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன் படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து கழகத்தில் ஈடுப்பட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர். இத்தனை அடுத்து தனது இளவல் விக்கிரமனை பாண்டிய சோழன் என்ற பேருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான் குலோத்துங்கன்.

படைத் தளபதிகள்:

1) கருணாகரப் பல்லவன்

கருணாகரப் பல்லவன் என்கின்ற பல்லவ தொண்டைமான் குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்களில் இருந்தே தோழனாக இருந்தவனாக காணப் படுகின்றது. ஆதலால் குலோத்துங்கன் ஆட்சி தொடக்கத்திலிருந்தே படைகளை ஆளுமைப் படுத்தி வந்தவன் என்பது திண்ணம். கருணாகரனும், காளிங்கராயனும் குலோத்துங்கனின் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்ற படைத் தலைவர்களாவர். இவ்விரண்டு நபர்களை மையப் படுத்தியே பெரும் போர்களை குலோத்துங்கன் புரிந்தான் என்பதும் திண்ணம்.

2) உடையான் ஆதித்தன்:

உடையான் ஆதித்தன் என்கின்ற அரையன் மூவேந்தவேளாண். இவன் குலோத்துங்கனின் படைத் தளபதிகளுள் ஒருவன் ஆவான். மூவேந்த வேளாண் பாண்டியப் போரினை அடுத்து நிகழ்ந்த சேர யுத்தத்திலும் கலந்துக் கொண்டவன். ஆதலால் இப்பய்ரினைப் பெற்றான்.

3) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்

4) அழகிய மணவாள நம்பி

5) ராஜ ராஜ மதுராந்தகன்.

இவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ்ந்த சேரப் போரிலும் ஈடுப் பட்டவர்கள். இவர்களில் அழகிய மணவாள நம்பியும், ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப் பட்டனர்.

சேர யுத்தம் :

காந்தளூர் எனப்படும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காக விளங்கியது. ராஜ ராஜ சோழனின் காலம் தொட்டு காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள் பாண்டியர்கள் தோற்பதை எண்ணியவுடன் பின்வாங்கினர். காந்தளூர் அருகே சேர மன்னன் ரவி மார்த்தாண்ட வர்மன் தயாரக இருந்தான் குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கழகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன் காலத்தினைக் கடக்காமல் சேரர்களை எதிர்நோக்கி சென்றான். பாண்டியர்களை விட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர் சேரர்கள். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை பின் வாங்கி கடலோடியது. பாண்டிய படையும் இலங்கை படையும் சேரப் படைக்கு உதவினார்கள். இவ்வாறாக சேரப் படை சோழர்களை எதிர்நோக்கி காத்திருந்தது.

கருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் தலைமயில் போரினால் ஈடுப் பட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால் அவர் நேராக காந்தளூர் போரிற்கு படையுடன் வந்தார். ஆதலால் குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்து போரிட்டான். மிகவும் இளைய வயதினை உடைய ரவி மார்த்தாண்ட வர்மன் குலோதுங்கநிர்க்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சேர தேசத்தினை வென்று திரும்பினான் சோழன்.

படைத் தளபதிகள்:

கருணாகரத் தொண்டைமான், காளிங்கராயர், உடையான் ஆதித்தன் இவர்களைத் தவிர வேறு சில படைத் தலைவர்கள் இப்போரினில் பங்கேற்றனர்.

1) கரனை விழுப்பரையர்

2) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி

இலங்கைப் போர் :

வீர ராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய விஜயபாகு குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக் காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். சிங்கள தேசத்தில் இருந்த சோழ வீரர்களை கட்டுப்படுத்த சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்க செய்தான். குலோத்துங்கன் சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில் இலங்கை தேசத்தில் சோழ அரசு பலம் குன்றியது. சாளுக்கிய தேசத்தை வென்ற பின் குலோத்துங்கன் பாண்டிய தேசத்தை நோக்கி பயணப்பட்டான். சிங்கள தேசத்தை இழக்க விருப்ப படாத குலோத்துங்கன் தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர்.

ராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் மிகவும் சீரிய போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. இத்தோல்வியினை அடுத்த மனம் குன்றாத விஜயபாகு மகானகக்குளா என்ற இடத்தில் படை வீடு அமைத்து திட்டம் தீட்டினான். சுதந்திர சாம்ராஜ்யத்தை அமைத்திட திட்டம் தீட்டிய விஜய பாகுவின் அடி மனதில் வேள்வி எரிந்துக் கொண்டிருந்தது. ஆதலால் அவன் புத்திக்கு சிறந்த யோசனை எழுந்து படை வீட்டைக் கலைத்தான்.

சிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன். நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கழகம் ஏற்பட்டது. இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.

சாளுக்கியனுடனும் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்ப்பட்ட போர்கள் காரணமாக இலங்கையில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்கன் ராஜேந்திரனை சோழ தேசம் திரும்பும் படிக் கட்டளை இட்டான். அருகே குழப்பங்களை கலைந்த பின்பு இலங்கையை பின்பு பார்க்கலாம் என்று எண்ணிய அவன் சோழப் படைகளைப் பின்னுக்கு எழுத்தான். இவ்வாறாக விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும் வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது. இலங்கையை மட்டுமே இழந்திருந்தது.

படைத் தளபதிகள்:

1) இளவரசன் ராஜேந்திரன்

2)வீர விச்சாதிர மூவேந்த வேளார்

3)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்

முதலாம் கலிங்கத்துப் போர்

குலோத்துங்கன் தெற்கே பாண்டிய தேசம் நோக்கித் திரும்பிவுடனே சாளுக்கிய அரசை கைப்பற்றினான் ஆறாம் விக்கிரமாதித்தன். அரசை கைப் பிடித்தவுடன் மீண்டும் சோழனுடன் போர் புரிய விரும்பாத அவன், கலிங்க தேசத்தினை துண்டி விட்டான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான், அதனை எதிர்த்து வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுத்தனர். வெங்கிக்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர். முதலாம் கலிங்கத்துப் போர் குலோத்துங்கனின் ஆரம்ப ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த ஒரு போராகும்.

படைத் தளபதிகள்:

குலோத்துங்கனின் மைந்தன் விக்கிரம சோழன் இப்போரினில் பங்கு கொண்டான். அவனிற்கு துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர்.

இரண்டாம் கலிங்கத்துப் போர்

இந்த இரண்டாம் கலிங்கத்துப் போரே தமிழக வரலாற்றின் சிறப்பு மிகுந்த போராக காணப் படுகின்றது. களிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் மிகக் கடுமையாக போர் நிகழ்ந்ததாக காணப்படுகின்றது.

இப்போரின் தலைமை ஏற்று நடத்தியவன் கருணாகரத் தொண்டைமான். இப்போரின் காரணங்கள் தெளிவாக அறிய இயலவில்லை ஆனால் கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போரினை புரிந்துள்ளதாக தெரிகின்றது. கலிங்கத்துப் பரணி என்றக் காவியத்தினை இப்போரினை அடுத்து ஜெயம் கொண்டார் என்ற புலவன் பாடியதன் மூலம் இப்போரின் தன்மைதனை உணர்கின்றோம். ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப் படுவது பரணி என்ற தொடரின் மூலம் கருணாகரன் மிக வலுவுள்ள படைதனை எதிர்க் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளான் என்று அறிகின்றோம். மிக வலுமை மிகுந்த படைதனைக் கொண்டிருந்த அனந்தவர்மன், கங்கபாடி, இரட்டை மண்டலம் மற்றும் சாளுக்கியப் படைகளின் தோழமைப் பெற்று சோழனை எதிர்த்து நின்றான். காஞ்சி நகர் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இருப் பெரும்படைகளும் மோதியதில் இழப்புகள் இருப்பக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழ தேசம் கலிங்கத்தை அடிப்பணிய வைத்தது.

படைத் தளபதிகள்:

1) கருணாகரப் பல்லவன்

2) அரையன் காளிங்கராயர்

3) அரையன் ராஜ நாராயணன்

வெளிநாட்டு வணிகத் தொடர்புகள்

இலங்கை நாட்டினை குலோத்துங்க சோழன் இழந்திருந்தாலும் அவனது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் மிகவும் மேலோங்கி இருந்தது. வீர ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்திலேயே குலோத்துங்கன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குலோத்துங்கன், அவனது ஆட்சி காலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருந்தான். சாம்ராஜ்ய போட்டியில் சமாதானத்தை நிறுவும் வலிமை மிக்கவனாக இருந்தான். ஸ்ரீ விஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக குலோத்துங்கனின் மைந்தன் ராஜ ராஜ சோழன் பெரும் படையுடன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமால், குலோத்துங்க சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். அவனே இளவயதில் சீன தேசம் சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஆட்சி அமைத்த பின்பு சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். இவ்வாறு வாணிகம் அவனது ஆட்சி ஆண்டில் சிறப்புற விளங்கியது. மேலும் வாநிகத்தினை பேருக்கும் வண்ணம், சுங்கத்தை நிறுத்தினான் ஆதலால் இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார்.

சீன தேசம் அடுத்து குலோத்துங்கனின் அவையினர் கம்போச நாட்டிலும், சக்கர கோட்டத்திற்கும், பாலி தேசத்திற்கும் , பாகர் (burma) நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர்.

அமைச்சரவை

வாசுதேவ பட்டர்

குலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன்.

பிரம்மராயர் பார்த்திவேந்திரர்

குலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன்.

படைத் தலைவர்கள்:

1) கருணாகரப் பல்லவன் 2) அரையன் காளிங்கராயர்3) சேனாதிபதி இருங்கோவேள் 4) அரையன் சயந்தன் 5) உடையான் ஆதித்தன் 6) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர் 7) அழகிய மணவாள நம்பி 8) ராஜ ராஜ மதுராந்தகன் 9) கரனை விழுப்பரையர் 10) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி2)வீர விச்சாதிர மூவேந்த வேளார் 11)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான் 12) அரையன் ராஜ நாராயணன்

Sunday, October 5, 2008

சோழ சாம்ராஜ்யம்

சோழ சாம்ராஜ்யம்

பாரதத்தின் வலிமை மிகுந்த சாம்ராஜ்யங்கள் என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய பேரரசுகளில் ஒன்று சோழ சாம்ராஜ்யம். பாரதத்தின் தெற்கே தங்கள் ராஜ்யத்தை விஸ்தரித்து கடல் கடந்து தங்கள் சாம்ராஜ்ய பெருமைகளை பரப்பிய உயர் குடியாக விளங்கியவர்கள். வாணிபம் பொருட்டு மட்டும் கடல் கடந்தவர்கள் அல்லர் அரசு விஸ்தரிப்பின் பொருட்டும் கடல் கடந்தவர்கள். தமிழும், கலையும் பேணி காத்தவர்கள் சோழ அரசர்கள். அவர்களைப் பற்றிய ஒரு படைப்பாக இந்த வலைத்தளம் உருவாகின்றது.

காவேரியுடைத்த மண் :
காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

வரலாற்றின் செப்பேடுகளின் ஆட்சி ஆண்டுகள் :
கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சின்னங்கள்:
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.

Friday, October 3, 2008

அதிராஜேந்திர சோழன்

அதிராஜேந்திர சோழன்

அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவான். தந்தை இருந்த காலத்திலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. வீரராஜேந்திரன் இறப்பிற்கு பின் அதிராஜேந்திரன் சோழநாட்டுக்கு அரசன் ஆனான். இவனுடைய ஆட்சி மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் இறக்க நேரிட்டது.

இவனது இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும். அதிராஜேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. அக்காலத்தில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது. வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், இதன்காரணமாகக் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது. அதிராஜேந்திரனின் இறப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் ஐயம் வெளியிட்டுள்ளார்கள்.

வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு, இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் ஒருவனின் கீழ் வந்தது. இவனே முதலாம் குலோத்துங்கன் எனப்பட்டவன்.

அதி ராஜேந்திரனின் சகோதரி கணவனாகிய விக்கிரமாதித்தன் சோழ தேசத்தில் விளைந்திருந்த குழப்பத்தை பயன்படுத்தி தன்னை சோழ தேசத்தில் திடப் படுத்திக் கொள்ள திட்டமிட்டான். இவனைப் பற்றிய பாணர் சரித்திரத்தில், விக்கிரமாதித்தன் அதி ராஜெண்டிரநிற்கு உதவும் பொருட்டு சோழ தேசத்தில் இருந்ததாகவும் குழப்பங்களை களைந்து ஆட்சி செய்ய உதவிய தாகவும் கூறுகிறார். ஆதலால் இவர்களது குறிப்பில் குலோத்துங்கன் பற்பல இடையூறுகளை அதி ராஜேந்திரன் காலத்தில் விளைவித்ததாகவும் ஆட்சியை அபகரிக்க முயன்றதாகவும் குறிக்கப் பட்டுள்ளது ஆனால் அப்படி இருப்பின் குலோத்துங்கன் சோழ தேசத்தில் விரோதியாகவே மாறி இருக்க முடியுமே தவிர மன்னனாக இருந்திருக்க முடியாது ஆதலால் பாணரின் குறிப்புகள் தவறாக இருக்க வேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறாக பற்பல ஆராய்ச்சிகள் இருந்தாலும் அதி ராஜேந்திரனின் இறப்பிற்கும் குலோதுங்கநிற்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக குறிக்கின்றது கலிங்கத்து பரணி. குலோத்துங்கன் இளமை காலத்தில் கடாரத்திலும் சீன தேசத்திலும், சக்கர கோட்டத்திலும் இருந்ததாக பயில்கின்றது. அதி ராஜேந்திரனின் இறப்பிற்கு பிறகு அவன் சோழ தேசம் வந்து குழப்பங்களை அகற்றி அரியணை ஏறி இருக்க வேண்டும்.

Thursday, October 2, 2008

சதுர்வேத மங்கலம், மணிமங்கலம்

"தென்னாடு உடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி"

கலையும் தமிழும் புத்துயிர் பெற்றது பல்லவர்கள் காலத்தில். களபிறர்கள் காலத்தே சமஸ்கிருதமும் சாகிருதி என்ற மொழியும் தமிழகத்தில் தடம் பதித்து இருந்த காலத்தில் தமிழுக்கு தொண்டாற்ற பிறந்தவர்கள் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும். தமிழுக்கு தொண்டாற்ற அவர்கள் இருந்த போது அவர்களுக்கு சேவை செய்யவும் கலைதனை வளர்க்கவும் உறுதுணையாய் இருந்தவர்கள் பல்லவர்கள். அந்த பல்லவர்கள் தங்கள் ஆட்சிதனை புத்துயிர் பெற்ற இடம் இந்த மணிமங்கலம்.

சாளுகியர்களிடம் மகேந்திர வர்மர் தோற்ற இடம் இந்த மணிமங்கலம். தங்கள் தோல்வி தனை களைந்து வெற்றிக் கொடிதனை ஏற்ற மாமல்லன் புறப்பட்ட இடமும் இந்த இடம் தான். ஆதலால் தமிழுக்கு புத்துயிர் ஊட்டிய பல்லவர்களின் முக்கிய இடமாக திகழ்ந்த இந்த மணிமங்கலத்தில் சிறப்புற விளங்கிய சிவாலயம் இன்று கலை இழந்து சிதைந்த நிலையில் கவனிப்பாரற்று இருக்கின்றது.

தங்களின் புத்துயிர் பெற்ற மண்ணை நினைவிடம் ஆக்க கலைதனை கை கொண்டான் மாமல்லன் . சிறிய கோவிலாக இருந்திருக்க கூடிய இந்த கைலாசநாதர் கோவில் சோழர்கள் காலத்தில் பெரிதும் மாற்றப் படிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

இந்த கைலாசநாதர் கோவிலின் அருகே உள்ள தர்மேஸ்வரநாதர் கோவிலும் சிறிது சிறிதாக பழுது அடைந்து வருகின்றது. இந்த கோவிலும் பல்லவ காலத்தில் கட்டப் பட்ட கோவிலாகும்.

சதுர்வேத மங்கலம்

சதுர்வேத மங்கலம் என்று சாசனங்களில் குறிக்க பட்டிருக்கும் இந்த ஸ்தலம் தமிழர்களின் மிகப் புகழ் வாய்ந்த ஸ்தலம் ஆகும். நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் நாயன்மார் அவர்களால் பாடப் பட்ட ஸ்தலம். நரசிம்ம பல்லவனின் படை மாதண்ட நாயகனாகிய (சேனாதிபதி) இந்த பரஞ்சோதியே பின்னாளில் சிறுத்தொண்ட நாயன்மார் ஆனவர். தானங்களில் சிறந்த தானம் அன்னதானம், அந்த அன்னதானத் தொண்டினை இந்த கோவிலில் தொடங்கி வைத்தவர் சிறுத்தொண்ட நாயன்மாரே.

சதுர்வேத மங்கலம் என்று பேர் பெற்ற இந்த ஸ்தலமே இன்றைய மணிமங்கலம் என்னும் கிராமம் ஆகும். வரலாற்று சிறப்பு பெற்ற இந்த ஸ்தலத்தில் புனரமைப்பு பனி நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.


பாலாபிஷேகம்

இந்தக் கோவில் புனரமைப்பு பணியினை ARULMIGU THIRUKAILAYANATHAR GNANAMBIGAI EDUCATIONAL & CHARITABLE டிரஸ்ட்ஏற்றுக் கொண்டுள்ளது. இவர்களது மேற்பார்வையில் 2008 ஜனவரி மாதம் 20 ம நாள் பாலபிஷேகம் சிறப்புற நடைப் பெற்றது. மேலும் இந்த கோவிலில் இறைவனுக்கு தனி தனியாக சந்நிதிகள் கட்டப்படவுள்ளன.

இறைவன் மேல் பாரத்தினை ஏற்றி வேலைதனை தொடங்கி விட்டார்கள் இதோ இன்னொரு விண்ணகரம் கட்டப் படுகின்றது. உலக ரட்சகன் ஆபத்பாண்டவன் அருளோடு ஆரம்பித்திருக்கும் இந்த புனரமைப்பு வேளையில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

Wednesday, October 1, 2008

ராஜகேசரி வீர ராஜேந்திர சோழன்


இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன். இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான்.

இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

போர்கள்
வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கிழக்குச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.

சாளுக்கியப் போர்கள்
வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.

அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.

தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வேங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வேங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வேங்கியில் மன்னனாக்கினான்.

கலிங்கத்துப் போர்
வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. அத்துடன் மட்டும் இல்லாமல் சோழர்களின் வணிகச் சந்தைக்குப் பிரச்சனையாக முளைத்தது இந்த கலிங்க நாடு. சாளுகியர்களுக்கு உதவும் வண்ணம் கலிங்கர்கள் தமிழர்களை அடிமைப் படுத்த ஆரம்பித்தனர், இவர்களது இந்த செய்கை தமிழ் காவலர்களாகிய சோழர்களை இவர்கள் மீது படை எடுக்க செய்தது. இந்த போரின் தொடர்ச்சியே குலோத்துங்கனின் காலத்தில் நிகழ்ந்த கலிங்கத்துப் போரின் முக்கிய காரணமாகும். இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான்.

இலங்கைப் போர்
சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான ரோகனா பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டிய சோழன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது. விஜயபாகு இலங்கை தேசத்தின் அடிமைத் தனத்தை களைந்து சுதந்திர தேசமாக்க பாடுப்பட்டான். அவனது வீரத்துக்கு பரிசாக இலங்கை தேசதினருக்கு சுதந்திர தாகமும் பிறந்ததால் சோழர்கள் பிற்காலத்தில் இலங்கையிலிருந்து பின் வாங்க வேண்டி இருந்தது.

கடாரப் படையெடுப்பு
வீரராஜேந்திரனின் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை.
போர் தினவு எடுத்த தோள்களுக்கு எங்கு போர் நடக்கும் என்றும் சிந்திக்க மட்டுமே தோன்றும் ஆனால் வீர ராஜேந்திரன் காலத்தே போர் தினவு எடுத்து அலைந்த இந்த இளவலுக்கு. இவன் தோள் தினவின் பொருட்டு பிறந்தது சக்கர கோட்டத்து போர். ஆம் அந்த இளவல் நம் வீர நாயகன் "அநபாயன்" என்று வளர்ந்த அம்மாங்க தேவியின் புதல்வன் "குலோத்துங்க சோழன்" தான்.
சக்கர கோட்டத்தில் போர் புரிந்துக் கொண்டிருந்த அநபாயனை வரவழைத்து கடாரத்திற்கு அனுப்பி வைத்தான் வீர ராஜேந்திரன். கடாரப் பயணத்திற்குப் பின் குலோத்துங்கன் சீன தேசம் சென்றதாக வரலாறு இயம்புகிறது.

சாளுக்கியருடனான தொடர்பு
முதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.

வீர ராஜேந்திரன் மக்கள்
வீர பாண்டிய சோழன், அதி ராஜேந்திர சோழன் என்று இரண்டு புதல்வர்களும் மதுராந்தகி என்று ஒரு மகளும் வீர ராஜேந்திரனுக்கு உண்டு. மதுராந்தகியை விக்கிரமாதிதன்னுக்கு திருமணம் முடித்து கொடுத்தான் சோழன். இதன் பொருட்டே விக்கிரமாதித்தன் வீர ராஜேந்திரனின் மரணிதிற்குப் பின்பு அதி ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் அரசியலில் ஈடுப்பட்டான். அவன் அதி ராஜேந்திரனுக்கு உதவி செய்ததாக பாணர் பாடியுள்ளார்.