Thursday, April 16, 2009

பாரதி

மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்

மூச்சை நிறுத்திவிடு,

தேகத்தைச் சாய்த்துவிடு அல்லாலதில்

சிந்தனை மாய்த்துவிடு,

யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்

ஊனைச் சிதைத்துவிடு,

ஏகத் திருந்துலகம் - இங்குள்ளயாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்பாரத்தைப் போக்கிவிடு,

சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்செத்த உடலாக்கு,

இந்தப் பதர்களையே - நெல்லா மெனஎண்ணி இருப்பேனோ?

எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்றுஇயங்கி யிருப்பவளே!

உள்ளம் குளிராதோ?

பொய்யாணவஊனம் ஒழியாதோ?

கள்ளம் உருகாதோ? - அம்மா!

பக்திக்கண்ணீர் பெருகாதோ?

வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறுவேட்கை தவிராதோ?

விள்ளற் கரியவளே - அனைத்திலும்மேவி யிருப்பவளே!

Saturday, April 4, 2009

"எங்களைப் பற்றி"

"எங்களைப் பற்றி"

"ஹாய்" என்று சொல்லிய வண்ணம் வழக்கம் போல் தாமதமாக உள்ளே நுழைந்தார் திரு என்கின்ற திருநாவுக்கரசு. நெற்றி நிறைய திருநீறிட்டு இருக்கும் . பேச்சில் வல்லவர், தித்திக்க பேசி மனம் கவரும் வித்தை தெரிந்து இருப்பதால் ரெயின்போ வானொலியில் பகுதி நேர RJ (Radio Jockey) வாக வேலை செய்கிறார். திருநாவுக்கரசின் எண்ணங்களும் செயல்பாடுகளும் media துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவரது எண்ணங்களையே வெளிப்படுத்தும்.

"வாடா திரு, என்னிக்கு நீ சொன்ன டைமுக்கு வந்திருக்க இன்னைக்கு வரதுக்கு" என்று சொல்லிய வண்ணம் திருவை நோட்டம் விட்டார் அவரது நெருங்கிய நண்பர் ஜோதிவேல் மூர்த்தி. Creative Consulting என்று ஒரு தனியார் கம்பெனி ஒன்றை நடத்துகிறார். வலைத்தளங்கள் உருவாக்கி நிறுவனங்களுக்கு அவர்களது தளங்களை மேம்படுத்துவது தான் இந்த நிறுவனத்தின் தொழில். மேலும் இவரது இன்னோர் நோக்கம் நமது நண்பர் திருநாவுக்கரசரை வாரி விடுவது தான். பேச்சில் மிகவும் வல்லவர்~ இவரது பெருமையை கூர வேண்டும் என்றால் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தை படிக்காமலேயே நமது குழுமத்தினில் அனைத்து தலைப்புகளிலும் விளாசும் நபர்.

"வாங்க சார், எங்கேயும் மீட்டிங் இல்லாத காரணத்தால இங்க வந்திடீங்களா அல்லது வழி மாறி இந்தப் பக்கம் வந்துடீங்களா" என்று தன் பங்குக்கு திருவை வாரினார் லக்ஷ்மி மேடம். காரைக்குடி மண்ணை சேர்ந்த நமது குழும மேலாளரிடம் மண் வாசனையுடன் ஒட்டியிருப்பது அந்த அழகிய சிரிப்பு. பெங்களூர் நகரில் செட்டில் ஆகி ஒரு கம்பெனியில் HR துறையில் மேலாளராக பணி புரிகிறார். இவரது யோகம் இவரைப் போலவே எண்ணங்கள் கொண்டிருக்கும் "சுப்பு" அவர்களை கரம் பிடித்தது தான். "சுப்பு சார் + லக்ஷ்மி மேடம்" என்றாலே ஒரு சிறந்த அட்வெஞ்சர் ட்ரிப் என்று தெரிஞ்சுக்கலாம்.

"இல்லை மேடம், டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். வண்டியும் இல்லை பஸ்ல வந்ததுனால லேட் ஆய்டுச்சு" என்று அசடு வழிந்தார் திரு.
"நீங்க வீட்லேர்ந்து நடந்து வந்திருந்தா கூட இந்நேரத்துக்கு வந்திருக்கலாம், சும்மா லேட்டா வந்துட்டு எதையாவது சாக்கு சொல்லாதீங்க" என்றான் நமது குழுவின் இளவல் ஜெயக்குமார். இசையில் மனம் தொலைத்து "கலாஷேத்ரா"வில் பணி புரிகிறார் ஜெயக்குமார்.


"அட, நீ வேற ஜெய், எங்கேயாவது சைட் அடிச்சுட்டு பஸ்ஸ விட்டுருப்பார். அதை இங்க வந்து சமாளிக்க பார்கிறார்" என்று தன் பங்குக்கு திருவை தாளித்தார் ஸ்ரீராம். "எங்க திரு, நேத்திக்கு போன் பண்றேன்னு சொல்லிட்டு ஒரு msg கூட அனுப்பாம இருக்கீங்க" என்றான் ஸ்ரீ.

"இல்ல மச்சி, நேத்திக்கு ஒரு ரெகார்டிங் முடிச்சுட்டு வீட்டுக்கு போறதுக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு, அதான் போன் பண்ண முடியல" என்று சால்ஜாப்பு சொன்னார் நமது திரு.

ஸ்ரீராம் : பார்ப்பதற்கு அப்படியே கல்லுரி மாணவர் போல் இருப்பவன் அனால் அந்த அழகிய வெளிர் முடிகள் ஸ்ரீராமின் வயதினை அதிகமாகவே காட்டுகின்றது. சென்னையில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை செய்கிறார், "இதோ அதோ" என்று பெங்களூர் மாற்றலுக்கு தயாராக இருக்கின்றார். நமது குழுமத்தினரால் செல்லமாக "வீரத்தளபதியார்" என்றே அழைக்கப் படுபவர்.

ஜோதிவேல் அவர்களின் கைப்பேசி பாட ஆரம்பித்தது.

"ஹலோ"

"ஹலோ ஜோதிவேல், என்னங்க எல்லாரும் வந்துட்டாங்களா"

"ம்ம், எல்லாரும் வந்தாச்சு நீங்க தான் இன்னும் வரக் காணும்"

"இல்லை ஜோதி, ஆபீஸ்ல திடீர்னு கொஞ்சம் வேலை வந்துடுச்சி, இப்ப எல்லாம் ரொம்பவே பிழிஞ்சு எடுக்கறாங்க. அதான் என்னால வர முடியல அப்படின்னு சொல்ல தான் போன் பண்ணினேன். மீட்டிங் முடிஞ்சதும் கால் பண்ணுங்க" என்று சொல்லியபடி போன் கால் கட் ஆனது.


அட வேற யாரும் இல்லைங்க அவர் தான் நமது குழும மேல்லாளர் LK என்று அழைக்கப்படும் L Karthik. உலகத்தில் உள்ள பெரும்பாலான நூல்களைப் படித்திருப்பாரோ என்று எண்ண வைப்பவர். எந்த டாப்பிக் எடுத்தாலும் அதிலே வெளுத்து வாங்குபவர் LK.

இவர்களது உரையாடல்களை கேட்ட வண்ணம் ஸ்நாக்க்ஸை காலி செய்து கொண்டிருந்தேன் நான் - சத்தியன். ஒரு தனியார் வங்கியில் சேல்ஸ் மேனஜராக வேலை செய்கிறேன்.

இதோ இங்கே சென்னையில் உள்ள வூட்லண்ட்ஸ் டிரைவ் உணவகத்தில் சந்திக்கின்றோம். பொன்னியின் செல்வன் குழுமத்தின் மூலம் ஒருவரை ஒருவர் அறிந்து, அனைவரது எண்ணங்களும் ஒன்றுப் பட்டு இருந்த காரணத்தால் சந்தித்தோம். சோழர்களின் பெருமையை அறிந்துக்கொள்ள வலைப்பதிவுகள் இல்லை, ஒரு சிறந்த வரலாறு அதன் இருப்பிடம் இழந்துக் கொண்டிருக்கிறது, தெற்கு தேய்ந்து வந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது மக்கள் நமது முன்னோர்களின் மேன்மையை கண்டிப்பாக அறிய வேண்டும் என்று பற்பல சிந்தனைகளின் விளைவாக விளைந்தது தான் இந்த .thechozhas.com வலைத்தளம்.

நமது குழுமத்தின் மற்ற உறுப்பினர்கள் :அபிராமி , நந்தக்குமார் : கணினி துறையில் வேலை செய்பவர்கள் என்பதை அடிக்கடி நிருப்பிக்கும் வண்ணம் இவர் செய்வது "cut, copy, paste". எங்கே தேடுகிறார்கள் என்பது நமக்கு தெரியாது ஆனால் இவர்களது பதிவுகள் பயனுள்ள தகவல்கள். முத்து, மணிமாறன், கிருஷ் இவர்கள் அனைவரும் நமது குழுமத்தின் சகாக்கள்.


வீரசோழர்களின் சரித்திரம், தமிழர்களின் பெருமைகள், முன்னோர்களின் வாழ்கை முறை, கலை, கலாச்சாரம் ஆகியவற்றினைப் பற்றிய ஒரு பதிவாக தருகின்றோம் இந்த தளத்தினை. அடுத்த தலைமுறைக்கு நமது மண்ணின் சரித்திரம் தெரிய அதோ எங்கள் பக்கங்கள்... "www.thechozhas.com"