Friday, October 3, 2008

அதிராஜேந்திர சோழன்

அதிராஜேந்திர சோழன்

அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவான். தந்தை இருந்த காலத்திலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. வீரராஜேந்திரன் இறப்பிற்கு பின் அதிராஜேந்திரன் சோழநாட்டுக்கு அரசன் ஆனான். இவனுடைய ஆட்சி மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் இறக்க நேரிட்டது.

இவனது இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும். அதிராஜேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. அக்காலத்தில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது. வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், இதன்காரணமாகக் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது. அதிராஜேந்திரனின் இறப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் ஐயம் வெளியிட்டுள்ளார்கள்.

வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு, இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் ஒருவனின் கீழ் வந்தது. இவனே முதலாம் குலோத்துங்கன் எனப்பட்டவன்.

அதி ராஜேந்திரனின் சகோதரி கணவனாகிய விக்கிரமாதித்தன் சோழ தேசத்தில் விளைந்திருந்த குழப்பத்தை பயன்படுத்தி தன்னை சோழ தேசத்தில் திடப் படுத்திக் கொள்ள திட்டமிட்டான். இவனைப் பற்றிய பாணர் சரித்திரத்தில், விக்கிரமாதித்தன் அதி ராஜெண்டிரநிற்கு உதவும் பொருட்டு சோழ தேசத்தில் இருந்ததாகவும் குழப்பங்களை களைந்து ஆட்சி செய்ய உதவிய தாகவும் கூறுகிறார். ஆதலால் இவர்களது குறிப்பில் குலோத்துங்கன் பற்பல இடையூறுகளை அதி ராஜேந்திரன் காலத்தில் விளைவித்ததாகவும் ஆட்சியை அபகரிக்க முயன்றதாகவும் குறிக்கப் பட்டுள்ளது ஆனால் அப்படி இருப்பின் குலோத்துங்கன் சோழ தேசத்தில் விரோதியாகவே மாறி இருக்க முடியுமே தவிர மன்னனாக இருந்திருக்க முடியாது ஆதலால் பாணரின் குறிப்புகள் தவறாக இருக்க வேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறாக பற்பல ஆராய்ச்சிகள் இருந்தாலும் அதி ராஜேந்திரனின் இறப்பிற்கும் குலோதுங்கநிற்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக குறிக்கின்றது கலிங்கத்து பரணி. குலோத்துங்கன் இளமை காலத்தில் கடாரத்திலும் சீன தேசத்திலும், சக்கர கோட்டத்திலும் இருந்ததாக பயில்கின்றது. அதி ராஜேந்திரனின் இறப்பிற்கு பிறகு அவன் சோழ தேசம் வந்து குழப்பங்களை அகற்றி அரியணை ஏறி இருக்க வேண்டும்.

No comments: