Wednesday, October 1, 2008

ராஜகேசரி வீர ராஜேந்திர சோழன்


இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன். இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான்.

இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

போர்கள்
வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கிழக்குச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.

சாளுக்கியப் போர்கள்
வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.

அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.

தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வேங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வேங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வேங்கியில் மன்னனாக்கினான்.

கலிங்கத்துப் போர்
வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. அத்துடன் மட்டும் இல்லாமல் சோழர்களின் வணிகச் சந்தைக்குப் பிரச்சனையாக முளைத்தது இந்த கலிங்க நாடு. சாளுகியர்களுக்கு உதவும் வண்ணம் கலிங்கர்கள் தமிழர்களை அடிமைப் படுத்த ஆரம்பித்தனர், இவர்களது இந்த செய்கை தமிழ் காவலர்களாகிய சோழர்களை இவர்கள் மீது படை எடுக்க செய்தது. இந்த போரின் தொடர்ச்சியே குலோத்துங்கனின் காலத்தில் நிகழ்ந்த கலிங்கத்துப் போரின் முக்கிய காரணமாகும். இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான்.

இலங்கைப் போர்
சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான ரோகனா பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டிய சோழன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது. விஜயபாகு இலங்கை தேசத்தின் அடிமைத் தனத்தை களைந்து சுதந்திர தேசமாக்க பாடுப்பட்டான். அவனது வீரத்துக்கு பரிசாக இலங்கை தேசதினருக்கு சுதந்திர தாகமும் பிறந்ததால் சோழர்கள் பிற்காலத்தில் இலங்கையிலிருந்து பின் வாங்க வேண்டி இருந்தது.

கடாரப் படையெடுப்பு
வீரராஜேந்திரனின் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை.
போர் தினவு எடுத்த தோள்களுக்கு எங்கு போர் நடக்கும் என்றும் சிந்திக்க மட்டுமே தோன்றும் ஆனால் வீர ராஜேந்திரன் காலத்தே போர் தினவு எடுத்து அலைந்த இந்த இளவலுக்கு. இவன் தோள் தினவின் பொருட்டு பிறந்தது சக்கர கோட்டத்து போர். ஆம் அந்த இளவல் நம் வீர நாயகன் "அநபாயன்" என்று வளர்ந்த அம்மாங்க தேவியின் புதல்வன் "குலோத்துங்க சோழன்" தான்.
சக்கர கோட்டத்தில் போர் புரிந்துக் கொண்டிருந்த அநபாயனை வரவழைத்து கடாரத்திற்கு அனுப்பி வைத்தான் வீர ராஜேந்திரன். கடாரப் பயணத்திற்குப் பின் குலோத்துங்கன் சீன தேசம் சென்றதாக வரலாறு இயம்புகிறது.

சாளுக்கியருடனான தொடர்பு
முதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.

வீர ராஜேந்திரன் மக்கள்
வீர பாண்டிய சோழன், அதி ராஜேந்திர சோழன் என்று இரண்டு புதல்வர்களும் மதுராந்தகி என்று ஒரு மகளும் வீர ராஜேந்திரனுக்கு உண்டு. மதுராந்தகியை விக்கிரமாதிதன்னுக்கு திருமணம் முடித்து கொடுத்தான் சோழன். இதன் பொருட்டே விக்கிரமாதித்தன் வீர ராஜேந்திரனின் மரணிதிற்குப் பின்பு அதி ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் அரசியலில் ஈடுப்பட்டான். அவன் அதி ராஜேந்திரனுக்கு உதவி செய்ததாக பாணர் பாடியுள்ளார்.

No comments: