Sunday, December 14, 2008

இந்திரா விழா

புகார் நகரினைப் பற்றி எழுதுங்கால் இந்திரா விழாவினைப் பற்றி குறிப்பிட்டு சொல்லாதிருந்தால் புகாரின் சிறப்பு தெரியாமலேயே போய் விடும் .

சோழர்கள் சூரிய மரபினர் என்றும் குறிப்பிடப் படுவர். அசுரர்களை எதிர்த்த இந்திரநிற்கு சோழர்கள் உதவினார் என்றும், அவர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பட்டினப்பாக்கமும் மருவ்வுர்பாக்கமும் இணைகின்ற இடத்தின் நடுவே இருந்த நாளங்காடி என்ற இடத்தினில் பலிபீடம் கொண்டு இருக்கும் பூதத்தினை இந்திரன் பூமிக்கு அனுப்பினான் என்று சொல்லப் படுகின்றது.

சோழர்கள் போரினால் வெற்றிப் பெற இந்த பூதம் துணை செய்கின்றது என்பதனால் பூததினைப் போற்றும் விதமும், இந்திரனை வணங்கும் விதமுமாக இந்த இந்திர விழா புகார் நகரினில் ஆண்டு தோறும் நடைப் பெற்றது. சித்திரை மாது சித்திரை விண்மீன் கூடிய பூரணை நாளில் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் இந்த விழா நடக்கும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இயம்புகின்றார்.

இந்த இந்திர விழாவினில், புகார் நகரத்தில் உள்ள அனைத்து வித மக்களும் எவ்வித பேதமும் இன்றி மகிழ்வுடன் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து இன்புறுவர். புகார் நகரினில் இருந்த யவனர்கள், அரபியர்கள், தமிழர்கள், கடல் கடந்து வந்த மக்கள் என அனைவரும் இந்த இருபத்தெட்டு நாட்களிலும் பங்கு பெறுவர் என்றும், கேளிக்கை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிகழும். கடல் சூழ்ந்த இந்த புகார் நகரினில் இரவினில் தீப பந்தல்களின் நடுவே கலை நடனமும், பற்பல கலைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை நிலைநிறுத்தி போட்டி புரிவர்.

ஆகா, இந்திர விழா புகார் வாழ் மக்கள் அனைவரின் இன்பக்கரமான நாட்களாய் இருந்து வந்தமையை நாம் அறியலாம்.

No comments: